தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை எப்போது கிடைக்கும் என அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் நிதி நிலையை விரைவில் சீர் செய்த பிறகு ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மு க ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றான மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரேஷன் கடைகள் மூலம் 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்தார். இந்த அறிவிப்பு எப்போது நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. இது குறித்து பெண்கள் அரசிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் குடும்ப அட்டையில் குடும்பத் தலைவியின் புகைப்படம் இருந்தால் தான் 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் என்ற வதந்தி பரவி வருகிறது.
இதனால் ஏராளமான பெண்கள் மாவட்டங்களில் உள்ள உணவு வழங்கல் துறைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இது தவறான தகவல் என்றும் ஒரு வேளை ஸ்மார்ட் கார்டில் புகைப்படம் மாற்றும் படி அறிவிப்பு வெளியானால் ஆன்லைன் மூலம் மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் ரேஷன் கடைகளில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்விக்கு எழுந்து வருகிறது.
இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் ராமச்சந்திரன், தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளது. அதனால் அரசு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரண நிதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிதி நிலையை விரைவில் சீர்செய்த பிறகு ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை