ஆன்லைன் வகுப்பிற்காக மரம் ஏறும் மாணவர்கள்: கல்வி அமைச்சர் வருத்தம்
Was
ஒடிசாவில் ஆன்லைன் கல்வி பயிலும் மாணவர்கள் இணைய வசதிக்காக மலைகள், மரங்கள் மீது ஏற வேண்டிய சூழல் இருப்பதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கொரோனா பரவல் குறையாததால், பள்ளிகளை மீண்டும் திறப்பதில் சிரமம் உள்ளது. அதனால் பெரும்பாலான பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் இணைய வேகம் குறைவாக இருப்பதால் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்வதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சமீர் ரஞ்சன் டேஷ் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் ஆன்லைன் வகுப்பிற்காக பல கிலோமீட்டர் நடந்து செல்வதாகவும், மலைகள் மற்றும் மரங்கள் மீது ஏற வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தற்போது மாநிலத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் கல்வி பயின்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். தொலைக்காட்சி, செல்போன், இணைய வசதி இல்லாத காரணத்தால் சுமார் 38 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவின் தொலைதூர பகுதிகளில் இணைய வசதியை விரிவுபடுத்தும் பொருட்டு, முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற பகுதிகளில் ஆசிரியர்கள் நேரில் சென்று வகுப்புகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சமீர் ரஞ்சன் டேஷ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை