NEET , JEE - தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும், நீட் - ஜே.இ.இ., தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது.
திட்டமிட்டபடி தேர்வுகள்
செப்டம்பர், 1 மற்றும் 6ம் தேதிகளில் ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வும்; செப்., 27ல், ஜே.இ.இ., அட்வான்ஸ் தேர்வும்; செப்., 13ல், நீட் தேர்வும் நடத்தப்படும் என, தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்திருந்தது.இந்நிலையில், தேர்வுகளை எழுதும் மாணவ - மாணவியர், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை, தேசிய தேர்வுகள் முகமை நேற்று வெளியிட்டது.
அதன் விபரம்:
தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். வீட்டில் இருந்தே, குடிநீர் பாட்டில், 'சானிடைசர்' ஆகியவை எடுத்து வர வேண்டும்.மாணவர்கள் தேர்வு மையத்தை அடைந்ததும், முக கவசத்தை கழற்றிவிட்டு, தேர்வு மையத்தில் தரப்படும், புதிய முக கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும். தேர்வு மையத்திற்குள், தண்ணீர் பாட்டில், சானிடைசர் மற்றும் 'அட்மிட் கார்டு' எனப்படும் அனுமதி சீட்டு தவிர, வேறெதுவும் அனுமதிக்கப்படாது.தேர்வு எழுதும் போது, முக கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியமில்லை.தேர்வு மைய வாயிலில், கூட்டத்தை தவிர்க்கும் பொருட்டு, மாணவர்களின் வருகைக்கான நேரம், முன்பே தெரிவிக்கப்படும். அந்த நேரத்தில் மட்டுமே, அவர்கள் தேர்வு மையத்திற்கு வர வேண்டும்.அனுமதி சீட்டு மற்றும் எஸ்.எம்.எஸ்., வாயிலாக, தேர்வு மைய வருகைக்கான நேரம் குறித்த தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்கள் தங்களுக்குள் குறைந்தபட்சம், 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். உடல் வெப்பநிலை, 99.4 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருந்தால், சம்பந்தப்பட்ட மாணவர்கள், தனி அறைக்கு அழைத்து செல்லப்படுவர்.அங்கு, அவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், 15 அல்லது 20 நிமிடங்களுக்கு பின், மீண்டும் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும். அப்போதும், உடல் வெப்பநிலை குறையவில்லை எனில், அவர்கள் தனி அறையில், தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.மாணவர்களை பரிசோதிப்பது, ஆவணங்களை சரி பார்ப்பது உள்ளிட்ட பணிகள், பதிவு அறையில் செய்யப்படும். அப்போது, அனுமதி சீட்டு, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை, மாணவர்கள் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த நடைமுறைக்கு பின், தேர்வு எழுத வேண்டிய அறை எண் குறித்து, மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும். கண்காணிப்புதேர்வு அறைக்குள் நுழைவதற்கு முன், கைகளை சோப்பு போட்டு கழுவி, சானிடைசரால் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். சோப்பு மற்றும் சானிடைசர்கள், தேர்வு மையத்தில் பல்வேறு இடங்களிலும், உபயோகத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும்.தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவோரில், 50 சதவீதம் பேர், தேர்வு அறைக்குள் இருப்பர். மீதியுள்ள, 50 சதவீதம் பேர், கடைசி மாணவர் தேர்வு அறைக்குள் செல்லும் வரை, மையத்தின் வெளிப்புறம், பதிவு அலுவலகம், தேர்வு அறைக்கு வெளிப்பகுதி உள்ளிட்ட இடங்களை, கண்காணிக்கும் பணியில் ஈடுபடுவர்.தேர்வு முடிந்ததும், ஒவ்வொருவராக தனித்தனியே வெளியேற அனுமதிக்கப்படுவர்.முக கவசம் மற்றும் கையுறைகளை, தேர்வு அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருக்கும் குப்பை தொட்டியில் மட்டுமே போட வேண்டும்.வெளியேறும் போது, போதிய இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். அதை கண்காணிக்க, தன்னார்வலர்கள் பணியில் இருப்பர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை