தமிழக பள்ளிகளில் வாரத்தில் 5 வேலை நாட்கள் – ஆசிரியர் கழகம் கோரிக்கை!!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
முதல்வருக்கு கோரிக்கை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 10 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரி 19ம் தேதி 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ளன. மேலும் வருகிற பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. பொதுத்தேர்வு நடைபெற இன்னும் சில மாதங்களே இருப்பதால் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை விரைந்து நடத்தி முடித்து தேர்வுக்கு தயார்படுத்த வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்பட உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக செய்தித் தொடர்பாளர் முருகேசன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கையில், அரசின் உத்தரவின்படி வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகளில் வேலை செய்து வருகிறோம். இதனால் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் மாதம் முழுவதும் வாரத்தில் 6 நாட்கள் வீதம் வேலை செய்யும் போது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கடுமையான மனச்சுமை ஏற்படும்.
அதுமட்டுமின்றி சனிக்கிழமைகளில் சத்துணவு பள்ளிகளில் வழங்கப்படாத காரணத்தால், மாணவர்கள் குறைந்த அளவிலேயே பள்ளிகளுக்கு வருகை புரிகின்றனர். இதனால் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை