மாத சம்பளம் குறையப்போகிறது...சேமிப்புக்கும் வரி..!!
Was
மாத சம்பளம் வாங்குவோருக்கு மத்திய அரசு இரண்டு பெரிய அதிர்ச்சிகளை பரிசாக வழங்கி உள்ளது. அதில் ஒன்று.. மாத சம்பள தொகை குறையப் போகிறது.. மற்றொன்று அவர்கள் சேமிப்பில் வைக்கும் பணமும் வரி என்ற அடிப்படையில் குறையப் போகிறது. கொரோனா காலத்தில் மக்கள் கைகளில் பணப்புழக்கம் இல்லாமல் தவித்து வருகிறார்கள். எனவே, பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த உலக பொருளாதார வல்லுனர்களும் சொல்லி வரும் நிலையில், இந்தியாவில் ஏற்கனவே இருக்கும் பணப்புழக்கத்தையும் குறைக்கும் வகையில் முக்கியமான இரு விஷயங்கள் அமலுக்கு வருகின்றன. வருமான வரியை முறையாக செலுத்துவது மாத சம்பளக்காரர்கள்தான்.
அவர்கள் ஊதியம் பெறும் போதே அனைத்து ஊதிய விவரங்களும், முறையாக பதிவு செய்யப்பட்டு விடுகிறது. எனவே வரி கட்டுவதில் இருந்து அவர்கள் தப்பிக்க முடியாது. எனவேதான் மாத சம்பளம் வாங்குவோருக்கு மத்திய அரசு அதிக சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எப்போதும் முன்வைக்கப்படுகிறது.
மாத சம்பளம் வாங்குவோர்
ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. மாத சம்பளம் வாங்குவோரின் பாக்கெட்டுகளில் இருந்து ஒவ்வொரு ரூபாயும் கூடுதலாக உறிஞ்சி எடுக்கப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு கொண்டுவந்த கோட் ஆன் வேஜஸ் (Code on Wages) என்ற நடைமுறை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் கூடுதலான ஊதிய பணம், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு செல்லும்.
கொடுப்பது போல கொடுத்து
இத்திட்டம் கொண்டு வரப்பட்டபோது, ஒவ்வொரு தொழிலாளர்களும் சேமிப்பும் உயரும் என்பதற்காகத்தான் மத்திய அரசு இவ்வாறு ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
இது தொழிலாளர்களுக்கு ரொம்பவே நல்லது என்று கூறப்பட்டது. ஆனால், கொடுப்பது போல கொடுத்துவிட்டு எடுப்பது போல எடுப்பது என்பது என்பார்களே.. அதுபோன்ற ஒரு அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் ஆண்டுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேல் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் பணம் சேர்ந்தால் அதற்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
பணத்தை கொடுத்து, எடுப்பது
ஒருபக்கம் தொழிலாளர்களின் கைகளில் இருந்து வருங்கால வைப்பு நிதிக்கு கூடுதல் பணத்தை கொண்டு செல்வது.. பிறகு கூடுதல் பணம் இருப்பதாக கணக்கு காட்டி, அந்த பணத்திற்கும் வரி போடுவது என இரட்டை வியூகத்தை கையில் எடுத்துள்ளது மத்திய அரசு. கோட் ஆன் வேஜஸ் திட்டம், 2021 ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஊதியம் குறையும், சேமிப்பும் குறையும்
ஒரு உதாரணம் பார்க்கலாம்..
ஆகாஷ் என்ற ஒருவர் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக வைத்துக் கொள்வோம். அவர் இதுவரை 20 ஆயிரம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு செலுத்தி வருவதாக உதாரணம் வைத்துக்கொள்ளலாம். கோட் ஆன் வேஜஸ், நடைமுறைக்கு பிறகு வருங்கால வைப்பு நிதிக்கான பணம் அதிகரிக்கப்பட வேண்டும். அப்படியானால் 25,000 ரூபாய் வருங்கால வைப்பு நிதிக்கு சென்றுவிடும். இதன் மூலம் அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதிய தொகையில் 5 ஆயிரம் ரூபாய் குறைகிறது. இது அவரது மாத செலவுகளை பெரிதாக பாதிக்கக்கூடும்.
மாத சம்பளதாரர்களுக்கு இரட்டை சிக்கல்
இன்னொரு பக்கம், மாதம் 25,000 ரூபாய் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு சென்றால், ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு மேல் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே இதைக் காரணம் காட்டி, அதன் மீது வரி போட்டு மத்திய அரசு அந்த பணத்தை எடுத்துக் கொள்ளும். மாதாமாதம் கைக்கு வரும் தொகை குறைகிறது ஒரு பக்கம்.. அவரின் வருங்கால சேமிப்பு மீது வரிபோடுவதால் எடுக்கப்படும் பணம் மறுபக்கம். இரட்டை சிக்கலில் மாத சம்பளம் பெறுவோர் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். வருமான வரியில் சலுகை அளிக்கப்படும் என்று நினைத்து இருந்த மாத சம்பளம் பெறுவோரின், இருக்கும் வருமானத்திலும் வேட்டை வைத்துள்ளது மத்திய அரசு என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
பிஎப் கணக்கிடப்படுவது எப்படி?
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) மீதான வட்டி, ஊழியர் மற்றும் நிறுவனம் அளித்த பங்களிப்பு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
பணியாளர் மற்றும் நிறுவனம் அளித்த பங்களிப்புகள், தொழிலாளரின் அடிப்படை ஊதியம் மற்றும் 'டிஏ' ஆகியவற்றிலிருந்து, 12% அல்லது 10% (இபிஎஸ் மற்றும் ஈடிஎல்ஐ உள்ளடங்கிய) என்பதுதான் பிஎப் தொகையாகும். 20 தொழிலாளர்களுக்கும் குறைவாக உள்ள நிறுவனங்கள் 10 சதவீத தொகையை பிஎப் பங்களிப்பாக அளித்தால் போதும்.
மாத சம்பளதாரர்கள் நிலை
ஒரு ஊழியரிடமிருந்து, 12 சதவீதம் பிஎப் தொகைக்கு போகிறது என்றே வைத்துக் கொள்வோம். அதிக ஊதியம் பெறுவோருக்குத்தானே ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் அளவுக்கு பிஎப் நிதியத்தில் தொகை சேரும் என்று சிலர் நினைக்க கூடும். ஆனால் அங்குதான் அடுத்த டுவிஸ்ட். கேட் ஆன் வேஜஸ் படி, அலோவன்ஸ் தொகை, ஊதியத்தில் 50 சதவீதத்திற்கு அதிகமாக போகக் கூடாதாம்.அதாவது மாத சம்பளம் வாங்குவோரின் அடிப்படை சம்பளம் மொத்த ஊதியத்தில் குறைந்தது 50% ஆக இருக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. தற்போதைய நிலையில் அடிப்படை சம்பளம் குறைவாகவும் மற்ற இதர தொகைகள் அதிகமாகவும் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
எனவே அலோவன்ஸ் என்று இனி அதிகமாக கணக்கு காட்ட முடியாது. அடிப்படை சம்பளத்தை உயர்த்தி காட்டியாக வேண்டும். அடிப்படை சம்பளத்தை உயர்த்தினால், பிஎப் விதிமுறைப்படி, பிஎப்புக்கு அதிக நிதி போகும். அங்கு சென்றதும், வரி விதிக்கப்படும். சிம்பிளா சொன்னால், நீங்க 1 லட்சம் சம்பளம் வாங்கினால் அடிப்படை சம்பளம் 50 ஆயிரமாக இருக்கும். அதில் டிஏவை கூட்டுங்க. அதில் 12 சதவீதம் எவ்வளவு தொகைன்னு பாருங்க. அந்த தொகைதான், இனி பிஎப்புக்கு போகும். அது வருடம் 2.5 லட்சத்தை தாண்டினால் வரி போடுவார்கள்.
Source
Veerakumar
One India Tamil
மாத சம்பளம் குறையப்போகிறது...சேமிப்புக்கும் வரி..!!
Reviewed by Rajarajan
on
3.2.21
Rating:
கருத்துகள் இல்லை