தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு , முழுமையான தகவல் உங்களுக்காக இதோ...!
இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் சேர்த்து கேரளா, மேற்குவங்கம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவைகள் உள்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என அறிவிப்பு.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான நடத்தை விதிகள் தற்போதே அமலுக்கு வந்துவிட்டன. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது, வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 19, வேட்புமனுக்கள் பரிசீலனை மார்ச் 20ஆம் தேதி நடைபெறும். திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் மார்ச் 22. ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
தேர்தலுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அரசியல் கட்சியினர் 5 பேர் மட்டுமே வீடு வீடாகச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும், வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வேட்பாளர் செலவு தொகை ரூ. 30.8 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல கேரளா, புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அசாம் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 27 முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 1 இரண்டாம் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 6ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தலும் நடைபெறும்.
மேற்கு வங்கத்திற்கு மார்ச் 27ஆம் முதற்கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. ஏப்ரல் 1 இரண்டாம் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 6ஆம் தேதி மூன்றாம் கட்டமும், 10ஆம் தேதி நான்காம் கட்டமும் தேர்தல் நடைபெறும். அடுத்தடுத்த கட்டத் தேர்தல்கள் ஏப்ரல் 17, 22, 26, 29 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து மாநிலங்களில் மே 2ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.
* தேர்தல் விதிமுறைகள் மீறல் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு e-vigil என்ற செயலி மூலமாக பொதுமக்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும்; தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு 1950 என்ற இலவச எண்ணில் அழைக்கலாம்.
* கொரோனா காரணமாக வாக்குப்பதிவு நேரம் 1 மணி நேரம் கூடுதலாக வழங்கப்படும்.
* தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது; அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்கவும் தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவு!
* அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும்.
* 80 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தபால் வாக்குகள் செலுத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை.
* அனைத்தும் வாக்கு சாவடிகளும் கீழ் தளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
* “தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமித்துள்ளோம்!” - சுனில் அரோரா
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பு , முழுமையான தகவல் உங்களுக்காக இதோ...!
Reviewed by Rajarajan
on
26.2.21
Rating:
கருத்துகள் இல்லை