ஐ.ஏ.எஸ்., தேர்வில், திண்டிவனத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி தமிழக அளவில் முதலிடம்
ஐ.ஏ.எஸ்., தேர்வில், திண்டிவனத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ரிஷப், தமிழக அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில், 23வது இடத்தையும் பிடித்து சாதித்துள்ளார்.
கடந்த, 2018ம் ஆண்டுக்கான, சிவில் சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகளை, மத்திய தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டது.இதில், ஐ.ஏ.எஸ்., தேர்வில், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி ரிஷப், 21, தமிழக அளவில் முதலிடமும், அகில இந்திய அளவில், 23வது இடத்தையும் பிடித்துள்ளார்.
இவர், திண்டிவனம் மான்ட்போர்டு பள்ளியில் பள்ளி படிப்பையும், சென்னை துரைப்பாக்கம் எம்.என்.எம்., ஜெயின் கல்லுாரியில், பி.இ., படிப்பையும் முடித்தார்.யு.பி.எஸ்.சி., தேர்வில்,மிகச் சிலரால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் பாடப் பிரிவுகளில் ஒன்றான, தமிழ் மொழிப் பாடத்தை, ரிஷப் தேர்ந்தெடுத்து, அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் வாகை சூடியுள்ளார். இவரது தந்தை செயின்ராஜ், அடகு கடை நடத்தி வருகிறார். தாய் ஆஷா, இல்லத்தரசி. மான்ட்போர்டு பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், ரிஷப்பிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ரிஷப் கூறியதாவது: சிறு வயதில் இருந்தே, சிவில் சர்வீசஸ் தான் என் இலக்கு. ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றது, மகிழ்ச்சியாக உள்ளது. மூன்றாவது முயற்சியில், தற்போது வெற்றி பெற்றுள்ளேன். 2016, 2017ம் ஆண்டுகளில் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றாலும், மெயின் தேர்வில், ஒரு சில மதிப்பெண்களில் தோல்வியடைந்தேன்.
இம்முறை, நண்பர்கள்குழுவாக அமர்ந்து விவாதித்தோம். இது, நேர்முக தேர்வில் நல்ல பலன் கொடுத்தது.உயர்ந்த பதவியை அடைய, யு.பி.எஸ்.சி.,யில் மட்டுமே சாத்தியம். வேறெந்த துறையிலும் உச்சம் தொட, பல ஆண்டுகள் தேவைப்படும். இதைப் புரிந்து தான், சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயாரானேன். தோல்வியை கண்டு துவளாமல், கடுமையாக முயற்சித்தால், ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற முடியும். பயிற்சி முடித்த பின், கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.
ஐ.ஏ.எஸ்., தேர்வில், திண்டிவனத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி தமிழக அளவில் முதலிடம்
Reviewed by Rajarajan
on
10.4.19
Rating:
கருத்துகள் இல்லை