தமிழ்புத்தாண்டு வரலாறு - இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ்ப் புத்தாண்டு தமிழர் புதிய ஆண்டு பிறப்பதைக் கொண்டாடும் விழாவாகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர்.தமிழ்ப் புத்தாண்டு நடைமுறைக்கு ஏற்றதாக ஒரு குறிப்பிட்ட நாளில் கொண்டாடப்பட்டாலும், தமிழ்ப் பஞ்சாங்கங்களில் அந்த நாளில் ஆண்டு பிறக்கும் சரியான நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். அதன் அடிப்படையிலேயே ஆண்டுக்காலம் கணிக்கப்படுகிறது.
பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையை சூரியனை மையமாக வைத்து தமிழன் 12 பாகங்களாகப் பிரித்தான். உண்மையில் பார்க்கப் போனால் பூமியே இந்தப் பகுதிகளில் நுழைகிறது. பூமியிலிருந்து பார்க்கும் நமக்கு சூரியன் இவற்றில் நுழைவது போலத் தோற்றமளிக்கிறது. இதை ஒப்புமை நகர்தல் (Relative Motion) என்று கூறுகிறோம். ஆகவேதான், சூரியன் இவற்றில் நுழைகிறான் என்று சொல்கிறோம். இந்த வான வீதியை மேஷத்தைத் தொடக்கமாகக் கொண்டு 12 பாகங்களாக மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனப் பிரித்தான். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன.மேஷம் என்பது பூஜ்யம் டிகிரியில் (அதாவது பாகையில்) ஆரம்பிக்கிறது. மொத்தம் 360 டிகிரிகள் (அல்லது பாகைகள்) என்பதால் ஒவ்வொரு ராசிக்கும் 30 டிகிரிகள் உண்டு.சூரியன் மேஷத்திற்குள் நுழையும் ஆரம்பம் சித்திரையில் நிகழ்கிறது. ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழன் ஆரம்பித்தான்.அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினான். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி மேஷத்தில் தொடங்குவதாலும் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிப்படுகிறது.
ஒரு தமிழ் ஆண்டு என்பது வானியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் அளவிடப்பட்ட காலத்தைக் கொண்ட காலப்பகுதியாகும். பூமி சூரியனை ஒரு தடவை சுற்றிவர 365 நாட்கள், 6 மணி, 11 நிமிடம், 48 நொடிகள் ஆகின்றது. இதுவே தமிழ் வருடத்தினதும் கால அளவாகும். சூரிய மேஷ இராசியில் பிரவேசிக்கும்போது தொடங்கும் ஆண்டு, மீன இராசியிலிருந்து வெளியேறும்போது முடிவடைகின்றது. ஆகவே தமிழ் வருடத்தின் கால அளவு எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. இதன் அடிப்படையிலேயே தமிழ்ப் புத்தாண்டு பிறக்கும் நாள், நேரம் கணிக்கப்படுகிறது. ஆங்கில நாட்காட்டியில் பெரும்பாலும் ஏப்ரல் 14 தொடங்கும் தமிழ் ஆண்டு சில ஆண்டுகளில் ஏப்ரல் 13 அல்லது 15 நாட்களில் தொடங்கும். இதற்குக் காரணம் ஆங்கில (கிரகோரியன்) நாட்காட்டி ஒரே சீரானதாக இல்லை என்பதே.
தமிழ்புத்தாண்டு வரலாறு - இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
Reviewed by Rajarajan
on
14.4.19
Rating:
கருத்துகள் இல்லை