இரயில் பெட்டிகளாக மாறிய வகுப்பறை, முன்னாள் மாணவர்கள் செய்த சாநனை
பெரம்பலுார்: பெரம்பலுார் அருகே, ரயில் போல் வர்ணம் பூசப்பட்டுள்ள அரசு துவக்க பள்ளியை, பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
பெரம்பலுார், சிறுவாச்சூர் கிராமத்தில், அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி உள்ளது. 1949ம் ஆண்டு, முன்னாள் அமைச்சர் கக்கன், இப்பள்ளியை திறந்து வைத்தார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் மக்களால் நடத்தப்படும் ஒரே பள்ளி என்ற பெருமைக்குரிய இப்பள்ளியை, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படும் நிர்வாகி, நடத்தி வருகிறார்.தற்போது, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 127 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
தலைமை ஆசிரியை ரேணுகா உட்பட, ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு, ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்த, சிறுவாச்சூர் ஆதிதிராவிடர் மக்கள், 1.25 லட்சம் ரூபாய் நிதி திரட்டினர். இதில், பள்ளி வகுப்பறையில் பழுதடைந்த ஜன்னல், கதவுகள், விளையாட்டு மைதானம் ஆகியவற்றை சீரமைத்தனர். வகுப்பறைகளுக்கு மின்சாதன வசதிகள் செய்து கொடுத்தனர்.தமிழகத்தில், ரயில் போக்குவரத்து இல்லாத மாவட்டமாக, பெரம்பலுார் உள்ளது. பெரம்பலுார் மாவட்ட மக்களில் பலர், இன்னும் ரயில் ஓடுவதை பார்த்ததில்லை.
இதனால், பள்ளியின் கட்டட சுவருக்கு, ரயிலை போன்று வர்ணம் தீட்டினால் வித்தியாசமாக இருக்கும் என முடிவெடுத்து, அதை, 1 லட்சம் ரூபாய் செலவில், செய்து முடித்தனர். ரயில் பெட்டிகள், வாசல் மற்றும் படிக்கட்டுகள், ஜன்னல்கள் என, தத்ரூபமாக, சுவருக்கு வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி வளாக சுற்றுச்சுவருக்கும் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டி, அதில் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் வரையப்பட்டுள்ன. சற்று தள்ளி நின்று பார்த்தால், ரயில் வந்து நிற்பது போலவே காட்சியளிக்கிறது. இதை, அருகில் உள்ள பல்வேறு கிராம மக்களும் வியப்புடன் பார்வையிடுவதுடன், அதன் முன் நின்று, &'செல்பி&' எடுத்தும் செல்கின்றனர்.
இரயில் பெட்டிகளாக மாறிய வகுப்பறை, முன்னாள் மாணவர்கள் செய்த சாநனை
Reviewed by Rajarajan
on
15.4.19
Rating:
கருத்துகள் இல்லை