வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் நேற்றைய தினம் ( 30 . 3 . 2020 ) கலந்தாய்வு செய்த பின்னர் , இன்று நான் உயரதிகாரிகளுடன் ஆலோசித்து தமிழ்நாட்டு மக்களின் நன்மை கருதி , கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கின்றேன் :
1 . கூட்டுறவு நிறுவனங்களில் பயிர்க்கடன் பெற்றவர்கள் தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
2 . வீட்டுவசதி கூட்டுறவு சங்கங்களுக்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
3 . தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
4 . அனைத்து மீனவ கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கைத்தறி கூட்டுறவு சங்கங்களிலிருந்து பெறப்பட்ட கடனுதவிகளுக்கான தவணைத்தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
5 . தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் ( TIIC ) கடன் பெற்றுள்ள சிறு , குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடன் தவணைகளைச் செலுத்த மூன்று மாத கால அவகாசம் ( 30 . 6 . 2020 வரை ) வழங்கப்படுகிறது .
6 . ' கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ' என்ற சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு கடனுதவித் திட்டம் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்திடம் கடனுதவி பெற்றுள்ள 2 , 000 சிறு , குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அவசர மூலதனத் தேவைகளுக்காக செயல்படுத்தப்படும் .
7 . சிப்காட் நிறுவனத்திடம் மென்கடன் பெற்றுள்ள தொழில் நிறுவனங்கள் கடன் தவணை செலுத்த மூன்று மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது .
8 . சிப்காட் தொழில் பூங்காவில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் பராமரிப்புக் கட்டணம் செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் ( 30 . 6 . 2020 வரை ) வழங்கப்படுகிறது .
9 . மோட்டார் வாகன ( Motor Vehicles Act ) , சட்டப்படி உரிமங்கள் மற்றும் வாகன தகுதிச் சான்றுகள் ( Licence & FC ) புதுப்பிக்கப்பட வேண்டிய கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
10 . எடைகளும் , அளவைகளும் சட்டம் ( Weights & Measures Act ) , தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் ( TN Shops & Establishments Act ) , உள்ளாட்சி அமைப்புகளினால் அமல்படுத்தப்படும் கேடும் குற்றமும் பயக்கும் தொழிற்சட்டம் ( Dangerous & Offence Act ) , ஆகியவற்றின் கீழ் புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களின் கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
11 . உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி , குடிநீர் கட்டணம் போன்றவை செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதங்களுக்கு ( 30 . 6 . 2020 வரை ) நீட்டிக்கப்படுகிறது .
12 . தற்போது உள்ள சூழ்நிலையில் , வாடகை வீடுகளில் குடியிருப்போர் வாடகை செலுத்துவதில் உள்ள சிரமங்களை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர் . எனவே , மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்று வீட்டு உரிமையாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
தமிழ்நாடு அரசு கொரானா வைரஸ் தொற்றினை தடுப்பதற்காக 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது . அதே சமயத்தில் , இந்நோய்த் தொற்று இரண்டாம் கட்டத்தில் இருப்பதாகவும் , அது மூன்றாம் கட்டத்திற்குப் பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து , தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் . எனவே , அத்தியாவசிய பொருட்களை வாங்க அரசு பிறப்பித்துள்ள நேரக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் . மேலும் , எந்தவிதமான வதந்திகளை நீங்கள் நம்ப வேண்டாம் . வதந்திகள் பரப்புவோர் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது . எனவே உங்களின் நன்மைக்காகவும் , உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும் , நம் நாட்டின் நன்மைக்காகவும் , பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் .
“ விழித்திருப்போம் ; விலகியிருப்போம் ; வீட்டிலேயே இருப்போம் ; கொரோனாவை வெல்வோம் . ”
K . பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சர்
வெளியீடு : இயக்குநர் , செய்தி மக்கள் தொடர்புத்துறை , சென்னை - 9
வீட்டு வாடகைத் தொகையை இரண்டு மாதங்கள் கழித்து பெற்றுக் கொள்ள வேண்டும் - தமிழ்நாடு முதலமைச்சர்
Reviewed by Rajarajan
on
31.3.20
Rating:
கருத்துகள் இல்லை