12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வு துவக்கம்...!
தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன. கொரோனா பரவலுக்கு மத்தியில் தேர்வுகள் நடைபெற உள்ளதால் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் மீண்டுமாக பள்ளிகள் மூடப்பட்டு காலவரையற்ற விடுமுறை வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வினை கருத்தில் கொண்டு வகுப்புகள் எடுக்கப்படுகிறது.
ஏற்கனவே சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது. கொரோனா நிலவரத்தில் மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக அரசு ஆலோசனை நடத்த உள்ளது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 16) முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடைபெற உள்ளன.
செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும் வளாக பகுதிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தேர்வுகளை கண்காணிக்க உயர் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை