தமிழகத்தில் அரசு ஊழியர்கள் 50 % பணியாளர்களுடன் பணியாற்ற கோரிக்கை
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருவதால் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே 50 சதவிகித ஊழியர்களுடன் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமெடுத்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பகல் நேர கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக தனியார் நிறுவனங்கள், கடைகள், தொழிற்சாலைகள் 50 சதவிகித ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த அசாதாரண நிலையிலும் 100 சதவிகித ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கு சான்றாக நெடுஞ்சாலைத்துறை தலைமை அலுவலகத்தில் உள்ள திட்ட மற்றும் வடிவமைப்பு அலுவலகத்தில் 7 பேருக்கும், ஒருங்கிணைந்த தலைமை பொறியாளர் அலுவலகங்களில் 10 பேருக்கும், எழிலக வளாகத்தில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அரசு அலுவலங்களில் பணிபுரிந்து வருவோர் அச்சம் அடைந்துள்ளனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அலுவலகங்களில் 50 சதவிகித ஊழியர்கள் மட்டும் சுழற்சி முறையில் பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக தமிழ்நாடு பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் அரசுக்கு கடிதம் எழுத திட்டமிட்டு இருப்பதாக கூட்டமைப்பினர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை