அரசு ஊழியர்களுக்கான ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி பிறப்பித்த தமிழக அரசின் அரசாணைக்கு தடை கோரிய வழக்கு
அரசு ஊழியர்களுக்கான ஓய்வுபெறும் வயதை 59லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த அரசாணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58 ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 59 ஆக உயர்த்தியது.
மீண்டுமாக கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன் காரணமாக தமிழகத்தில் பலருக்கு அரசு வேலை கிடைக்காமல் போவதாக எதிர்ப்புகள் உருவாகியது. அதன்படி திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்துள்ளனர்.
அவர் அளித்துள்ள மனுவில், ‘அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் சரியான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மேலும் கொரோனா காரணமாக அரசு பணிகளுக்கான தேர்வில் கலந்து கொள்ள முடியாதவர்களுக்கு கூட வயது உச்ச வரம்பை தளர்த்தவில்லை’ என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி இந்த வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜூன் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை