உண்மையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா?
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதியன்று, சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்ததும் வாக்கு இயந்திரங்களை, வாக்குகளை எண்ணும் மையங்களுக்குத் தேர்தல் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அப்போது வேளச்சேரி தொகுதியில் 3 வாக்குப் பதிவு இயந்திரங்களை ஸ்கூட்டியில் ஒரு நபர் எடுத்துச் சென்றதைக் கவனித்த பொதுமக்கள், அவரை மடக்கிப் பிடித்து விசாரிக்கத் தொடங்கினர். இந்தச் சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தவே, தேர்தல் ஆணையம் தலையிட்டு, அந்த வாக்கு இயந்திரங்கள் பழுதடைந்தவை என்றும் அதனாலேயே அவற்றைத் தனியே கொடுத்துவிட்டதாகவும் விளக்கம் தரப்பட்டது.
பின்னர் நடந்த விசாரணையில், அந்த இயந்திரம் 50 நிமிடங்களுக்குச் செயல்பட்டதும் அதில் 15 வாக்குகள் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இந்தச் சர்ச்சைகளைத் தொடர்ந்து வேளச்சேரி தொகுதியில் மறுவாக்குப் பதிவும் நடைபெற்றது.
தற்போது, தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் கொடிக்குறிச்சி யு.எஸ்.பி கல்லூரி வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கல்லூரி வளாகத்துக்கு அருகிலேயே மின் வசதிகளுடன்கூடிய கன்டெய்னர் நிறுத்தப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் 12 பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய கன்டெய்னர்கள் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களுக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நவீன வசதியுடன்கூடிய கன்டெய்னர்களில் அமர்ந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஹேக் செய்து முடிவுகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடலாம் என்ற பேச்சுகள் கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.
இந்த அச்சம் சரிதானா? உண்மையாகவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்து முடிவுகளை மாற்ற முடியுமா?
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குப்பதிவு செய்யும் பகுதி மற்றும் அதைக் கட்டுப்படுத்தும் பகுதி என்று இரண்டு பகுதிகள் உண்டு. இந்த இரண்டையும் ஒரு நீளமான கேபிள் மூலம் இணைத்திருப்பார்கள். இந்த இரண்டையும் எப்போதும் ஆன் செய்தே வைத்திருப்பார்கள். இயந்திரத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நம் வாக்காளர் அடையாள அட்டையைச் சரி பார்த்து அலுவலர் உறுதி செய்யாதவரை, நம்மால் வாக்குப்பதிவு இயந்திரத்தில் எதுவும் செய்ய முடியாது. அவர் உறுதிப்படுத்தியதும் ஒரு விளக்கு ஒளிரும். அப்போது நாம் வாக்களிக்கலாம்.
இது மின்னணு இயந்திரமாகவே இருந்தாலும், இதற்கு மின்சாரம் தேவையில்லை. பேட்டரிகள் மூலமாகவே இந்த இயந்திரம் இயங்கும். அதுமட்டுமன்றி, கள்ள ஓட்டுகளைத் தவிர்க்க இதில் பல கட்டுப்பாடுகளை, தயாரிக்கும்போது வடிவமைத்தார்கள். ஒரு நிமிடத்தில் அதிகபட்சம் 5 வாக்குகளை மட்டுமே இதில் பதிவு செய்ய முடியும். ஓர் இயந்திரத்தில் 3,840 வாக்குகள் வரையே பதிவு செய்யலாம். ஒரு முறை பதிவு செய்தால், இயந்திரத்தில் இருக்கும் அனைத்து வாக்குகளையும் அழிப்பதுதான் ஒரே வழி.
தேர்தலுக்கு முன்னால் இயந்திரத்தைத் துடைத்து, சேமிப்பிலிருக்கும் தகவல்களை அழித்துவிடுவார்கள். ஒரு சோதனை வாக்கெடுப்பு நடத்தி முடிவுகளையும் பரிசோதிப்பார்கள். மின்னணு இயந்திரம்தான் என்றாலும், இதில் பதிவாகும் வாக்குகளை டிஜிட்டலாக மாற்ற முடியாது. ஆகவே, இதை ஹேக் செய்ய முடியாது. வேண்டுமானால், இதில் ப்ரீ புரொகிராம் செய்து முன்கூட்டியே தங்களுக்குச் சாதகமாக வாக்கு எண்ணிக்கை வரும்படி செய்து வைக்க வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதற்கும் வழியில்லை.
ஏனெனில், வாக்கு இயந்திரங்கள் வந்து இறங்கிய பிறகே வேட்பாளர்கள் பட்டியலே வெளியிடப்படும். ஆகவே, பட்டியலில் எத்தனையாவதாக நாம் இருக்கிறோம் என்பதே வேட்பாளர்களுக்குத் தெரியாதபோது, அவர்களால் பட்டனை ப்ரீ புரொகிராம் செய்ய முடியாது. அதுமட்டுமன்றி, வாக்கு இயந்திரங்கள் மாவட்ட அளவிலும் தொகுதி அளவிலும் என்று இரண்டு முறை சீரற்ற முறையில் கலக்கப்படும். இதனால், எந்த மின்னணு வாக்கு இயந்திரம் எந்தத் தொகுதியிலிருக்கும் எந்த வாக்குச் சாவடிக்குச் செல்லும் என்பதை யாராலுமே கூறமுடியாது. அப்படியிருக்க, அந்தந்த வாக்குச் சாவடியில் இருக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்குகளை முன்கூட்டியே புரொகிராம் செய்வது சாத்தியமில்லை.
கருத்துகள் இல்லை