வாட்ச்மேன் டூ ஐஐஎம் பேராசிரியர்... நம்பிக்கையூட்டும் இளைஞர் ரஞ்சித்!
கனவுகளை அடைய இங்கு எதுவுமே தடையில்லை நீங்கள் தடையாக இல்லாமல் இருந்தால். வறுமையிலும்,ஏழ்மையிலும் போராடி தனது கனவை எட்டிப்பிடித்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த 28வயது இளைஞரான ரஞ்சித். அப்பா தையல்காரர், அம்மா தினக்கூலி காசர்கோட்டில் உள்ள மலைகிராமத்தில் இருந்து ராஞ்சியில் உள்ள ஐஐஎம்-மில் பொருளாதார துறையில் உதவி பேராசிரியாக பணியில் சேரவுள்ளார் ரஞ்சித்.
வெளிப்பூச்சு பூசாத சுவர்.. ஓடு வேயப்பட்டிருந்தாலும் கொட்டித் தீர்க்கும் மழையில் ஓடுகளில் பாய்ந்தோடும் தண்ணீர் அருவிகளாக ஆர்ப்பரித்து கொட்டாமல் இருக்க மேலே போடப்பட்டிருக்கும் தார்ப்பாய்கள். ஜன்னல்களில் எப்படியும் குற்றாலச்சாரல் வீசத்தான் செய்யும். வாசலில் இருக்கும் கேஸ் சிலிண்டர், தூரமாக நிற்கும் டிடிஹெச் குடை, ஒரு ஜோடி செருப்பு என தனது வீட்டை முகநூலில் அடையாளப்படுத்தியுள்ளார் ரஞ்சித். இங்கிருந்துதான் ராஞ்சிக்கான தனது பயணத்தை தொடங்கியுள்ளார்.
ரஞ்சித் வீடு
'இதுதான் நான் பிறந்த வீடு. இங்கிருந்து தான் வளர்ந்தேன். நான் ரொம்ப சந்தோஷமா சொல்வேன் இந்த வீடுதான் ஒரு ஐஐஎம் உதவி பேராசிரியரை உருவாக்கியது என்று. இந்த சின்ன வீட்டுல இருந்து ஐஐஎம் ராஞ்சிக்கான எனது பயணத்தை உங்களுக்கு சொல்கிறேன். எனது பயணத்தால் குறைந்தது ஒரு நபராவது ஈர்க்கப்பட்டால் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். ஒரு நல்ல மதிப்பெண்ணுடன் ப்ளஸ் டூ பாஸ் செய்தேன். ஆனால் அப்போது சூழ்நிலைகள் எனக்கு சாதகமாக இல்லை. என்னுடைய படிப்பை நிறுத்திவிடலாம் என எண்ணினேன். எனக்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தது. பனத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்சில் நைட் வாட்ச்மேன் வேலை கிடைத்தது. அதை வைத்து எனது படிப்பை தொடர்ந்தேன். காலையில் மாணவன் இரவில் வாட்ச்மேன்.
செயிண்ட் பியஸ் கல்லூரி (St Pius College) மேடைகளில் எப்படி பேச வேண்டும் என எனக்கு கற்பித்தது. காசர்கோடு தாண்டியும் இந்த உலகம் இருக்கிறது என்பதை செண்ட்ரல் யூனிவர்சிட்டி ஆஃப் கேரளா எனக்கு கற்றுத்தந்தது. அப்படித்தான் ஐஐடி மெட்ராஸ் என்ற பெரிய உலகத்தை அடைந்தேன். அது ஒரு விசித்திரமான இடம். முதன்முறையாக ஒரு கூட்டத்தில் நான் மட்டும் தனியாக இருப்பது போல் உணர்ந்தேன். உன்னால் இங்கு இருக்க முடியாது என் மனம் என்னிடம் அடிக்கடி கூறியது. மலையாளத்தில் மட்டுமே பேசி வளர்ந்தவன் இங்கு மற்றவர்களிடம் பேசவே அச்சப்பட்டேன். என்னுடைய ஆய்வு படிப்பை கைவிட்டு விடலாம் என்று கூட நினைத்தேன். என்னுடைய வழிக்காட்டி டாக்டர். சுரேஷ் நான் எடுத்த முடிவு தவறு என்பதை எனக்கு உணர்த்தினார். நான் விலகுவதற்கு முன்பு போராடச் சொன்னார். அப்போதிலிருந்து நான் வெல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தேன்.
என்னுடைய பயணம் பனத்தூர் மலைப்பகுதியில் இருந்து தொடங்கியது. குடிசையில் இருந்து ஐஐஎம் ராஞ்சிக்கான என்னுடைய பயணம் அவ்வளவு சுலபமானது இல்லை. இந்தப்பயணத்தில் என்னுடன் சேர்ந்து எனது பெற்றோர்களும் பாதிக்கப்பட்டனர். இதுபோன்ற ஆயிரம் குடிசைகள் உள்ளது. இந்த குடிசைகளில் இருந்து பல கனவுகள் நிறைவேறுதற்கு முன்பாகவே மடிந்துள்ளது. இனி, இந்தக்குடிசைகளில் இருந்து பல வெற்றிகரமான கதைகள் வரவேண்டும். உங்களை சுற்றி இடிந்து விழுந்த சுவர்கள் இருக்கலாம். அதற்காக நீங்கள் உயர்ந்த கனவை காண்பதை நிறுத்தாதீர்கள். உங்கள் கனவு நிச்சயம் ஒருநாள் நனவாகும்' எனப் பதிவிட்டுள்ளார். சுயவிளம்பரத்துக்காக இதனை நான் பதிவு செய்யவில்லை என்னுடைய வாழ்க்கை பலருக்கு உத்வேகத்தை அளிக்கும் என நண்பர்கள் கூறியதால் இதனை பதிவிட்டதாக ரஞ்சித் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை