கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. குடும்ப அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் கோதுமை மாவு, உப்பு மற்றும் ரவை ஆகியவை தலா ஒரு கிலோ வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்க்கரை, உளுந்தம் பருப்பு ஆகியவை தலா அரை கிலோவும், புளி, கடலை பருப்பு, ஆகியவை தலா கால் கிலோவும் வழங்கப்படுகிறது. கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள் ஆகியவை தலா 100 கிராம், குளியல் சோப்பு மற்றும் சலவை சோப்பும் வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 2 கோடியே 11 லட்சத்து 12 ஆயிரத்து 798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை, கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ஆம் தேதி முதல் தொடங்க அரசு திட்ட மிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை