இந்தியாவில் கிராமப்புற குழந்தைகளின் கல்வி பாதிப்பு – கல்வியாளர்கள் கருத்து!!
கொரோனா காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு துவங்கி பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், கிராமப்புற குழந்தைகளின் துவக்கக்கல்வி பாதிக்கப்பட்டுள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொதுவாக இந்தியாவில் 3 வயது நிரம்பிய குழந்தைகளை நர்சரி வகுப்பிலும், 4 வயது நிரம்பிய குழந்தைகளை முதல் வகுப்பிலும் சேர்ப்பது வழக்கம். அந்த வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் நகர்ப்பகுதிகளில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை நர்சரி மற்றும் ஒன்றாம் வகுப்புகளில் சேர்க்கின்றனர். ஆனால் கிராமப்புற பகுதிகளை பொருத்தளவு அந்த வயதுடைய குழந்தைகள் அங்கன்வாடி போன்ற பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
ஒரு மாணவருக்கு துவக்கக்கல்வி சரியாக அமைந்தால் தான் எதிர்காலத்தில் அவர்கள் சரியான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். தற்போது கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகள் வரை பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதால், இந்த குழந்தைகளின் துவக்கக்கல்வி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த குழந்தைகளுக்கு பள்ளிச்சூழல் குறித்த அறிமுகம் இல்லாமல் போகிறது என கல்வியாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குழந்தைகள் உரிமைகள் அமைப்பின் இயக்குனர் நாகசிம்ஹா கூறும்போது, ‘குழந்தைகளின் ஆரம்ப கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால், அதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பள்ளி என்ற சமூக அமைப்பு எப்படி இருக்கும், அவற்றில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடம் கற்பது, ஒழுக்கம், மொழித்திறன் என பல விஷயங்களை பள்ளிகள் கற்பிக்கிறது. அனைத்து பிள்ளைகளும் சமமாக அமர்ந்து கல்வி கற்பதே பள்ளிகளின் அடிப்படை நோக்கமாகும். இந்த எல்லா செயல்பாடுகளையும் இழந்து வரும் குழந்தைகளுக்கு கல்வியில் மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.
அந்த வகையில் மாணவர்களுக்கு பள்ளிகளை பற்றிய குறும்படங்களை தயாரித்து ஊடகங்கள் மூலம் காட்டி பள்ளி சூழலை குறித்து உணரவைக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார். இது தவிர நிமான்ஸ் மருத்துவமனையின் ஓய்வு பெற்ற மனநல மருத்துவர் சந்திரசேகர் கூறுகையில், 3 வயது குழந்தைகளுக்கு நர்சரி வகுப்புகள் அவசியமில்லை. அதே நேரத்தில் குழந்தைகளுக்கு கல்விச்சுமையை திணிக்கக்கூடாது. ஆனால் குழந்தைகளுக்கு பள்ளிச்சூழல் கட்டாயம் அவசியம் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை