தமிழகத்தில் காய்கறி, பழக்கடைகள் திறக்க அனுமதி..?
தமிழகத்தில் மேலும் முழு ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பாக நேற்று அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இதில் தற்போது அமலில் உள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 33,764 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தினந்தோறும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாநிலம் முழுவதும் மே 10 முதல் 24 ம் தேதி வரை முழு ஊரடங்கை அறிவித்தார். ஆனாலும் நோய் கட்டுக்குள் அடங்காததால் மேலும் ஒரு காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்துள்ளார்.
இந்த முழு பொது முடக்கத்தின் போது காய்கறி, பழங்கள், மளிகை கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . நடமாடும் காய்கறி கடைகள் மூலம் வாகனங்களில் வீதிதோறும் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி திங்கட்கிழமை அன்று ஊரடங்கு முடிவு பெறும் நிலையில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பது பற்றி முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பது குறித்து முடிவெடுத்துள்ளதாகவும், இதில் காய்கறி, மற்றும் பழக்கடைகள் மட்டும் குறைவான நேரம் திறக்க அனுமதி அளிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
கருத்துகள் இல்லை