தவறு செய்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன் என்று அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எச்சரிக்கை
திமுக ஆட்சியின் முதல் அமைச்சரவைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, அமைச்சர்களை மட்டும் வைத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
துறைசார்ந்த விஷயங்களை அமைச்சர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்றும்
நேர்முக உதவியாளர்கள் நியமனத்தில் தேவையற்றச் சர்ச்சைகள் ஏற்படுவதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காவல்துறை சுதந்திரமாக செயல்படவேண்டும் என்றும் அதில் எந்த அமைச்சரும் தலையிடக் கூடாது எனவும் ஏதாவது குறை இருந்தால், துறை அமைச்சரானத் தன்னைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். தேவையான புகார்களோ, சர்ச்சைகளோ வந்தால், யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்று கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆட்சியில் தவறு ஏதும் நடந்துவிடதா என பலரும் காத்திருக்கின்றனர் என்றும் அமைச்சர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தனது நிர்வாக முறை குறித்து நன்றாக அறிவீர்கள் என்பதால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் கூறியதாகத் தகவல் வந்துள்ளது.
நல்லாட்சி தருவோம் எனக் கூறி பொறுப்புக்கு வந்துள்ளோம். அதைக் காப்பாற்ற வேண்டும் என்றும் வெளிப்படைத் தன்மையை அமைச்சர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை