கல்வி துறையில் புதிய நிர்வாக அமைப்பு ஏற்படுத்த முடிவு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
பள்ளி கல்வி துறையில், மண்டல வாரியாக இணை இயக்குனர்களை நியமனம் செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்குனர், இணை இயக்குனர் பணிகள் மாற்றப்பட உள்ளன.
பள்ளி கல்வி துறையில், அரசின் முதன்மை செயலர் தலைமையில், பள்ளி கல்வி இயக்குனரகம், அரசு தேர்வு துறை, மெட்ரிக் இயக்குனரகம், ஒருங்கிணைந்த கல்வி திட்டம், தொடக்க கல்வி துறை. ஆசிரியர் தேர்வு வாரியம், பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம், பெற்றோர் - ஆசிரியர் கழகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம், முறைசாரா கல்வி இயக்குனரகம் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
பெரும் மாற்றம்
இவற்றில் பாடநுால் கழகம், ஒருங்கிணைந்த கல்வி திட்டம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகியன, நேரடியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுகின்றன. மற்றவை பள்ளி கல்வி துறையில், பதவி உயர்வு பெற்ற இயக்குனர்களால் நிர்வகிக்கப்படுகின்றன.
இந்த நிர்வாக முறையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., அரசு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியிடத்தை உருவாக்கி உள்ளது. வரும் நாட்களில், மேலும் பல சீர்திருத்தங்களை செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான கருத்துருக்கள் தயாராகி உள்ளதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது, சென்னை, விழுப்புரம், திருச்சி, வேலுார், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, தஞ்சை என, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மண்டலங்கள் பிரிக்கப்பட உள்ளன. இவற்றில் ஒவ்வொரு மண்டலத்திற்கும், ஒரு இணை இயக்குனர் அந்தஸ்தில் தலைமை அதிகாரி நியமிக்கப்பட உள்ளார்.அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், இணை இயக்குனர் அலுவலகத்தின் கீழ் செயல்பட வேண்டும்.
கருத்துருக்கள்
இணை இயக்குனர்கள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகம் பற்றி பள்ளி கல்வி இயக்குனரிடமும்; ஐந்தாம் வகுப்பு வரையிலான நிர்வாகம் குறித்து தொடக்க கல்வி இயக்குனரிடமும்; மெட்ரிக் பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனரிடமும் தகவல் தெரிவித்து நிர்வகிக்கும் வகையில், கருத்துருக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த கருத்துருக்கள் அரசின் பரிசீலினையில் உள்ளதாகவும், அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், அதிகாரிகளுக்கான பணி விதிகள் மாற்றப்படும். இந்த நிர்வாக மாற்றம் வந்தால், மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் அடிக்கடி சென்னைக்கு வந்து, அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை