இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை: தெற்கு ரயில்வே அறிவிப்பு
இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிவிப்பு:
"* ரயில் டிக்கெட்டுகள் ரயில்வே பணியாளர்கள், மாநில அரசால் அத்தியாவசிய சேவை பணியாளர்களாக அங்கீகாரம் பெற்ற சுகாதாரம், சட்டம் - ஒழுங்கு, தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே வழங்கப்படும். அவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
* மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுக பணியாளர்கள், இ-வணிகம் சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்கள், அச்சு, மின் ஊடகப் பணியாளர்கள், தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளின் ஊழியர்கள், தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் தங்கள் நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
பயணிக்க அனுமதிக்கப்படாதோர்:
* மாணவர்கள், கல்வி நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரயில்களில் பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
* பெண் பயணிகளுக்கு நாள் முழுவதும் பயணம் செய்வதற்கான பொது அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது.
50% பணியாளர்களுடன் தென்னக ரயில்வே இயங்கும்.
பின்பற்ற வேண்டியவை:
* முகக்கவசம் அணியாமல் ரயில் நிலையத்துக்குள் நுழையக் கூடாது.
* ரயில்களில் கூட்டமாக ஏறவோ, இறங்கவோ கூடாது.
* ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்.
* ஆவணங்களைப் பரிசோதிக்கும்போது ரயில்வே ஊழியர்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை