"உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்" - மு.க ஸ்டாலின் அறிக்கை!
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலையில் உள்ளதையொட்டி 'திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி' என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், ' 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்றார் நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள்! 'ஜனநாயகத்தில் ஜனங்களே எஜமானர்கள்' என்றார் நமக்கு எல்லாம் உணர்ச்சியை ஊட்டிய முத்தமிழறிஞர் கலைஞர்!தமிழ்மொழிக்கும் - இனத்துக்கும் - நாட்டுக்கும் காவல் அரணாக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.கழகத்திடம் தமிழகத்தை ஒப்படைத்தால் நாடும், நாட்டு மக்களும் நலமாக இருப்பார்கள் என்பதை உணர்ந்து மக்கள் தங்களது மகத்தான ஆதரவைக் கழகக் கூட்டணிக்கு வழங்கியுள்ளார்கள்.
தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செலுத்திய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, கழக ஆட்சியை மலர வைக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால் காலம் முந்திக் கொண்டு விட்டது. அந்தக் கனவை நிறைவேற்றியாக வேண்டும் என்ற துடிப்புடன் ஒவ்வொரு நாளும் செயல்பட்டோம். அந்த உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம்தான் மக்கள் தந்துள்ள இந்த மாபெரும் வெற்றியாகும். ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டுக்கு இயக்க ரீதியாகவும் - ஆட்சி ரீதியாகவும் உழைத்த நமது உழைப்புக்குக் கிடைத்த பாராட்டுப் பத்திரமாக நினைத்து இதனைப் பாதுகாப்பேன். நமது உழைப்புக்குத் தரப்பட்ட அங்கீகாரமாக இதனை நினைக்கிறேன்.
எத்தனை சோதனைகள் - எத்தனை வேதனைகள் - எத்தனை பழிச்சொற்கள் - எத்தனை அவதூறுகள் - என கழகத்தின் மீது வீசப்பட்ட அனைத்தையும் தங்களது வாக்குகளால் ஓரங்கட்டிய மொத்தத் தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி! நன்றி! நன்றி!
உங்களுக்கு உண்மையாக இருப்பேன்! உங்களுக்காக உழைப்பேன்! என்றென்றும் என் சிந்தனையும் செயலும் இந்நாட்டு மக்களுக்காகத்தான்!
இந்த வெற்றிக்கு உழைத்த கழகத்தின் கோடானு கோடி உடன்பிறப்புகளுக்கு நன்றி. கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல், கொள்கைவாதிகளின் கூட்டணியாகக் கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள், அந்த இயக்கங்களைச் சார்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!
ஜனநாயகப் போர்க்களத்தில் தி.மு.க. கூட்டணி அடைந்த வெற்றியைத் தங்களது வெற்றியைப் போல மதித்தும் நினைத்தும் காலையில் இருந்து என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து வரும் அகில இந்தியத் தலைவர்கள், மாநில முதலமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமயச் சான்றோர்கள், திரையுலக நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி. தமிழகத்தில் அமையப் போகும் கழக ஆட்சியானது, எத்தகைய கனவுகள் கொண்டதாக தமிழகம் அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் அனைவரும் சேர்ந்து நடத்தப் போகும் ஆட்சியாகும். கழகம் வென்றது! - அதைத் தமிழகம் இன்று சொன்னது! இனித் தமிழகம் வெல்லும்! - அதை நாளைய தமிழகம் சொல்லும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை