`பள்ளிக்கூடத்தை சீரமைக்கணும்!' - சிறுமியின் கடிதம், உத்தரவிட்ட ஸ்டாலின், நேரில் வந்த அன்பில் மகேஷ்
`பள்ளிக்கூடத்தை சீரமைக்கணும்!' - சிறுமியின் கடிதம், உத்தரவிட்ட ஸ்டாலின், நேரில் வந்த அன்பில் மகேஷ்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். வழக்கறிஞரான பாஸ்கரனின் மகள், அதிகை முத்தரசி (7). பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்புப் படித்து வந்தார். கடந்த சில வருடங்களாகவே சிதிலமடைந்து மிகவும் மோசமான நிலையிலிருந்த இந்தப் பள்ளிக் கட்டடத்தை இடித்து மீண்டும் சீரமைத்துத் தரக்கோரி பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் பலமுறை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் முதல் மாவட்ட ஆட்சியர் வரை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி
இந்நிலையில், 7 வயதுச் சிறுமி அதிகை முத்தரசி தன் தந்தை பாஸ்கரனின் வழிகாட்டுதலின் பேரில் 2019-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கட்டடத்தை சீரமைத்து தரக்கோரியும், ஆக்கிரமிப்பில் உள்ள பள்ளி மைதானத்தை மீட்டுத் தரக்கோரியும் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். சிறுமி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது.
சிறுமியின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, பள்ளியின் நிலை தொடர்பாக நீதிபதிகளுக்கு விளக்கிக் கூறினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பொன்னேரி கல்வி அலுவலர், திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஆகியோரை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டனர். மறு விசாரணையின்போது ஆஜரான கல்வித்துறை அதிகாரிகள், பள்ளிக்கட்டடம் சீரமைக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.
ஆனால், உண்மையில் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்படாமலும், பள்ளிக்கூடம் முறையாக இடித்து புதிதாகக் கட்டப்படாமலும், பெயின்ட் மட்டும் பூசிவிட்டு அதிகாரிகள் பொய் வாதம் செய்வதாகச் சிறுமி முத்தரசி தரப்பில் மறுப்பு மனு நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது. மறுப்பு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பள்ளியின் தற்போதைய உண்மை நிலை குறித்து அறிய திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதிபதியை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட தலைமை நீதிபதி சரஸ்வதி, பள்ளிக்கட்டடத்தை நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். மீண்டும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு மாணவர்களின் கல்வி விவகாரத்தில் வரட்டு கௌரவம் பார்க்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்ததோடு, ஓர் ஆண்டுக்குள் பழைய பள்ளிக்கூடத்தை இடித்துவிட்டு, ஆக்கிரமிப்புகளை மீட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், பள்ளி மாணவர்களின் நலன் கருதி மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் அனைவருக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு மாற்றுப் பள்ளிகளுக்குச் சென்று சேர்ந்து படிக்க அறிவுறுத்தப்பட்டது. வழக்கு தொடர்ந்த சிறுமி அதிகை முத்தரசியும் தற்போது தனியார்ப் பள்ளி ஒன்றில் சேர்ந்து படித்து வருகிறார்.
ஆனால், ஓர் ஆண்டுக்கு மேலாகியும் இதுவரையிலும் தமிழக அரசு சார்பில் பள்ளிக்கட்டடம் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் சிறுமி அதிகை முத்தரசி, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதி பள்ளிக்கூடத்தைச் சீரமைத்துக் கொடுக்குமாறு கோரிக்கை மனு ஒன்றை பதிவுத் தபால் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன் அனுப்பினார்.
அந்தக் கடிதத்தில் சிறுமி அதிகை முத்தரசி, ``மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீர்கேடு தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் புதிய பள்ளிக் கட்டடம் ஓர் ஆண்டுக்குள் கட்டித் தர வேண்டும் என உத்தரவிட்டு ஓர் ஆண்டுக்கு மேலாகியும் நீதிமன்ற உத்தரவு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. வழக்கின் மனுதாரர் மற்றும் பள்ளி மாணவி என்கின்ற முறையில் நானும், என் தந்தை பாஸ்கரனும் தொடர்ந்து போராடி வருகிறோம். கல்வி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பிலும் தொடர்ச்சியாகப் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள போதிலும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அறவழியில் முடிந்தவரை போராடிக் கொண்டிருக்கிறோம். பள்ளி நலன் சார்ந்த எங்களின் புகார் மனுக்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறித்து தமிழக முதல்வராகப் பதவியேற்றுள்ள தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம். எங்களின் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா..? நன்மை காக்கப்படுமா..? தாங்கள் வென்றதுபோல் அறம் வெல்லுமா..? பள்ளி பயனடையுமா..? நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்கள் மீது 100 நாள்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டே இந்தக் கோரிக்கை மனுவை முன்வைத்துள்ளேன்" என்று சிறுமி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Credit to
Vikatan.com
`பள்ளிக்கூடத்தை சீரமைக்கணும்!' - சிறுமியின் கடிதம், உத்தரவிட்ட ஸ்டாலின், நேரில் வந்த அன்பில் மகேஷ்
Reviewed by Rajarajan
on
11.5.21
Rating:
கருத்துகள் இல்லை