ஆசிரியர்கள் மீதான விந்தை மனிதர்களின் விமர்ச்சனங்களும், அவர்களுக்கான விளாசலும்... ஒர் தொகுப்பு
நீங்கள் எவ்வகை மனிதர்கள்?
1."இட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களின் சம்பளம் பாதியாகக் குறைக்கப்படுமா ?"
2."ஓராண்டாகப் பணிக்குச் செல்லாமல்
சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள்".
3."ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்திவிட்டு அதைப் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் பகிர்ந்தளித்தால் பத்தாயிரம் ரூபாய் கிடைக்கும்".
4."ஆசிரியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை பாதியாகக் குறைத்து விட்டு அதை முன்களப் பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்".
சமூகவலைத் தளத்தில் தீயாக பரவிவருபவை இவை.
ஏன் ஆசிரியர்கள் மீது இவ்வளவு வன்மம் ?
1.முதலில் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள் ஆசிரியர்களின் சம்பளம் இலட்சங்களில் இல்லை .இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிபவர்களில் இலட்சத்தை தொடுபவர்கள் சிலரிலும் சிலரே .
பெரும்பாலான ஆசிரியர்களின் சம்பளம் முப்பதாயிரத்திற்கே முட்டுவதை சமூகவலைத்தளப் போராளிகள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
2.ஓராண்டாகப் பணிக்குச் செல்லவில்லை என்று கண்ணை மூடிக் கொண்டு பதிவிடுபவர்களே...
கடந்த ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 2021 கடைசி நாள்வரை சென்று கற்றல்சார்ந்த பணிகளில் ஈடுபடுபட்டிருக்கிறோம்.
தேர்தல் பயிற்சி வகுப்புகள்,
தேர்பணி என்று ஆசிரியர்களின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணியும் அதில் ஒன்று.
3.குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு
நான்காயிரம் என்ன பத்தாயிரம்கூட வழங்குவார் மாண்புமிகு முதல்வர் அவர்கள் .அது அவரின் வள்ளல் தன்மை.மக்களின் மீது கொண்ட அக்கறை. ஆனால் அதை ஒரு குடும்பத்தின் வயிற்றில் அடித்துதான் பண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை அவருக்கு.
4. முன்களத்தில் நிற்கும் மருத்துவர் ,செவிலியர்களுக்கு முதல்வர் ஊக்க ஊதியத்தை ஏற்கெனவே அறிவித்திருக்கிறார்.தேவைப்படின் துப்பரவுப் பணியாளர் ,காவலர்களுக்கும் அறிவிப்பார்.இதற்காக இன்னொருவர் உலையில் கை வைக்க வேண்டிய அவசியம் இல்லை அவருக்கு.
ஆசிரியர் என்றால் இளக்காரமா?
உங்கள் தேவைக்காகக் குரல் கொடுப்பது ஒருவகை
எங்களுக்கு இவையெல்லாம் வேண்டும் என்று குரல் கொடுப்பதுவம் ஒருவகை
இவர்களுக்கு இதைக் கொடுக்காதீர் என்பது எவ்வகை ?
நீங்கள் எவ்வகை மனிதர்கள்?
மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்தும் வசதியின்றி சேராமல்...
பொறியியல் கல்லூரிகளில் படிப்பை பாதியில் விட்டுவிட்டு...
'ஆசிரியர் பயிற்சியில்' சேர்ந்தது எதற்காகத் தெரியுமா ?
எங்களின் பசியை நீண்ட நாட்களுக்குத் தள்ளிப் போட முடியாத காரணத்தினால்தான்.
இப்போதுள்ள ஆசிரியர்களில் 70_90 சதவீதம்பேர் முதல் தலைமுறையினர் என்பதை அறிவீர்களா?
எங்கள் வேலைகளில் ஏதேனும்
ஐயப்பாடு இருப்பின் எங்கள் வகுப்பறையில் ஒருநாள் மாணவராய் இருந்து பாருங்கள்.
ஒருவேளை உங்கள் பிள்ளை என் வகுப்பறையில் என் பிள்ளையாக மாறிப்போய் இருப்பின் தாரளமாக வாருங்கள் ;பேசுவோமே!
அப்போது வந்தீர்களா?
அதிகபட்சமான 'எதிர்_கேள்வி 'உங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்ப்பீர்களா? என்பதுதானே!
'உறுதியாகத் தயாராக இருக்கிறோம்' .
சொல்லப் போனால் காத்துக் கொண்டிருக்கிறோம்.
அதைச் சட்டமாக்கும்போது அனைத்து அரசு ஊழியர்களின் குழந்தைகள் அரசுப்பள்ளிகளில் படிக்கும் சூழல் உருவாகும்.அதாவது மாவட்ட ஆட்சித் தலைவர் முதல் கடைநிலை ஊழியர்வரை .
கட்டடங்கள் உயிர்பெறும்.
(இடிந்த கட்டடங்களை சீர்படுத்த எவ்வளவு பாடு படவேண்டியது இருக்கிறது தெரியுமா?)
விளையாட்டுத் திடல் விரியும்.
கழிவறைகள் பளிங்காகும்.
வாகன வசதி உருவாக்கப்படும்.
சத்துணவு தரம் பெறும்.
மரங்கள் சூழ்ந்து சோலையாகும்.
கண்காணிப்பாளர் ,குழந்தைகளைப் பராமரிப்போர் போன்ற தேவைக்கேற்ப பணியிடம் உருவாக்கப்படும்.
தனியார் பள்ளிகள் என்ற ஒன்றே இல்லாமல் போகும்.(கவனிக்க)
தனியார் பள்ளி சகோதர சகோதரிகள் முறையான தேர்வைச் சந்தித்து அரசு வேலைக்கு வரும் சூழல் உருவாகும்.
(மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் ,பெருமதிப்பிற்குரிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும் இத்தகவல் சேர்ந்தால் அதுவே எங்கள் பெரும்பேறாகும்)
இதற்கு தேவை ஒரு சட்டம்.
எங்கே உங்கள் குரலை உயர்த்துங்களேன் பார்ப்போம்.
விடுமுறை நாட்களில் பீர்பாட்டில்களை பள்ளிச்சுவரில் உடைக்காமல் இருக்க முடியுமா ?
நல்ல பள்ளிக் கட்டமைப்புக்காக குரல்கொடுக்க இயலுமா?
பள்ளிக்கு வரும் மாணவிகளை
சீண்டாமல் இருக்க முடியுமா?
இவ்வளவு ஏன் உங்கள் ஊரில்
மாணவர்களை உற்சாகப்படுத்த
ஒரு பென்சில்,குச்சி வாங்கிக் கொடுத்ததுண்டா?
"எண்ணம் தெளிவாக வையுங்கள்":
அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை மதிக்க மாட்டீர்கள்.
முகக்கவசம் அணிய மாட்டீர்கள்.
தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் மாட்டீர்கள் ;
அதற்கு எதிராக வதந்தியும் பரப்புவீர்கள்.
பொறுப்பற்ற ஒரு குடிமகனாக நீங்கள் செய்வதெல்லாம் சரி.
ஏதோ நாங்களாகவே பள்ளிக்குச் செல்ல மறுத்து வீட்டிலிருந்துகொண்டு சம்பளம்
பெற்றுக் கொள்ளவதாக நினைப்பு
உங்களுக்கு ...
ஓர் ஆசிரியர் என்பவர் ஆசிரியர் மட்டுமன்று அவருக்குள் ஓர் எளிய குடும்பம் மறைந்திருக்கிறது.
அதற்கான தேவையும் விரிந்திருக்கிறது.
தங்கை மகப்பேற்றிற்காக வாங்கிய கடனுக்கு இன்னமும் வட்டி கட்டியபாடில்லை.
அம்மாவின் மாத்திரைகள்
இரண்டாயிரங்களில் கரையும் விசித்திர தன்மை கொண்டவை.
தம்பியின் பொறியியல் இறுதியாண்டு பொறிவைத்து காத்திருக்கும்
ஊர்ப்பசங்களின் 'சிறந்த மட்டைவீச்சாளருக்கான தொடர் விருது' இவரையே சார்ந்து விளையாடும்.
எங்களின் வார இறுதிகளோ
பருவத்தேர்வு முடிவுகளோ
பல எழுதுகோள்களை
மகிழ்வாக கபளீகரம் செய்துவிடும்.
எங்களுக்கும் இஎம்ஐம் உண்டு.
எங்களுக்கும் மாதச் சம்பளத்தை தாண்டிய
கடனும் உண்டு.
இப்படியாகவே பெரும்பாலான ஆசிரியர்களின் வாழ்க்கை
நகர்ந்து கொண்டிருக்கும் ..
பொறாமையை விட்டொழியுங்கள்:
படித்தல்_ ஒரு தொழிற்பெயர் மட்டுமன்று.
அதன் ஆணிவேர் தீவிர 'வினை'ச்சொல்லாகும்.
இரவு பகல் பாராமல்,
ஊர் சுற்றித் திரியாமல்,
உறவுகள் தவிர்த்து ,
ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணிநேரத்திற்கும் மேலாகப்படித்து,
தகுதித் தேர்வெழுதி,
தகுதியை வளர்த்துக் கொண்டு,
ஆசிரியராய் நிற்க நாங்கள் பட்ட பாடு இருக்கே....
கடினப்பட்டு படித்ததால் உண்டான எளிய வழியை எங்கள் பிள்ளைகளுக்கு வழங்கி
அவர்களை வாழ்வாங்கு வாழ
முயற்சி செய்யும் ஆசிரியர் பணி
நீங்கள் நினைப்பதுபோல சாதாரணப் பணியன்று.
அதாவது நீங்கள்
ஒருவரைப் பற்றி குறைசொல்வது போன்று
எளிய பணி அன்று
ஒன்று செய்யுங்கள்
மாமனிதர்களே ...
ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு பாடநூல்வரையிலுள்ள அனைத்து பக்கங்களையும் வரிக்குவரி படித்து வைத்துக் கொள்ளுங்கள்;
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் கலந்துகொண்டு தரவரிசையில் முன்னிலை பெற்றால் ஒருவேளை
அரசுப் பணி சாத்தியமாகலாம்.
அதற்கான காலம் முடிந்துவிட்டதென்றால் போய் பிள்ளை குட்டிங்கள படிக்க வையுங்க
இல்லையென்றாலோ
ஏதேனும் ஐயமிருந்தாலோ
அருகிலுள்ள ஆசிரியர்களை
கூச்சப்படாமல் அணுகுங்கள் .
கற்பித்தலுக்காக எப்போதும்
தயாராய் இருப்போம்
நாங்கள்.
ஐந்தாண்டுகளுக்கொருமுறை போடும் ஒரு ஓட்டை தவிர வேறு எந்த முகாந்திரமும் அற்ற இவர்களால் பொறாமையைத்
தவிர வேறெந்த பயனும் இல்லை
கருத்துகள் இல்லை