தமிழகத்தில் முழு ஊரடங்கு கிடையாது? விதிகளை மதிக்காமல் நடமாடும் மக்கள்! நீதிமன்றம் வருத்தம்!
தமிழகத்தில் கொரோனா காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள போதிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றி திரிந்து கொண்டுள்ளனர் என ஒரு வழக்கு விசாரணையின் போது சென்னை உயர்நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் உணவுகள், தண்ணீர் இல்லாமல் விலங்குகள் ஆதரவற்று இருப்பதாக கூறி, அவற்றிற்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, விலங்குகளை மற்ற நேரங்களிலும் கூட மனிதாபிமானத்துடன், அறிவியல் ரீதியாக அணுக கால்நடைத்துறை திட்டம் வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து தலைமை நீதிபதி கூறுகையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது. ஆனால் பொது மக்கள் வழக்கம் போல வெளியே நடமாடி கொண்டிருக்கின்றனர்.
கடைகளிலும் அதிக அளவு கூட்டம் காணப்படுகிறது. இதை தடுக்க காவல்துறையினர் ஒலிப்பெருக்கிகள் மூலம் மக்களை அறிவுறுத்த வேண்டும். மக்களுக்கு ஏற்படும் குறைவுகளை தீர்க்கவே முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. வெளியே சாலைகளில் சுற்றி திரிவதற்கு அல்ல. பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடாமல் இருப்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும். இந்த பொது முடக்க காலத்தில் காவல்துறையினரும் பொது மக்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை