அரசு ஊழியர்கள் தடுப்பூசி போடாவிட்டால் ஊதியம் இல்லை - ஆளுநர் அறிவிப்பு!
புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்கள் வருகிற ஜூலை 1 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே மாதம் ஊதியம் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை அவர்கள் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போல புதுச்சேரியில் நோய்த்தொற்றை குறைக்க பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு, தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. முதலில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. பிறகு 18 வயது முதல் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மேலும் கடந்த 16-ந்தேதி முதல் தடுப்பூசி திருவிழா தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளிலும், நகரின் முக்கிய இடங்களிழும் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாக அதிக எண்ணிக்கையில் மக்கள் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வருகை புரிகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் ஜூலை 1 ஆம் தேதிக்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கூறிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன், அவ்வாறு செலுத்தாதவர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி திருவிழா இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை