தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – டிச.24ம் தேதி திருப்புதல் தேர்வு நிறைவு!
தமிழகத்தில் தற்போது மாணவர்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ளும் வகையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வரும் டிச.24ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிமற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதாவது கடந்த செப்டம்பர் மாதம் 9 முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், கல்லூரிகளும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பள்ளி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறை இன்றி தினசரி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் அனைத்தும் கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளார். மேலும் பொதுத்தேர்வுக்கு முன்னர் மாணவர்களின் கற்றல் திறனை ஆசிரியர்கள் அறிந்து கொள்ளும் வகையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய திருப்புதல் தேர்வு வரும் டிச.24ம் தேதி முடிவடைய உள்ளது. இந்த தேர்வானது அரையாண்டு தேர்வு முறையில் நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வரும் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அரையாண்டு விடுமுறை எதிர்பார்த்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
கருத்துகள் இல்லை