ஜன.3 முதல் பள்ளிகள் திறப்பில் மாற்றம் – சுழற்சி முறை வகுப்புகள் ரத்து! அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. பின்னர் கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இடையில் மழையின் காரணமாக சில நாட்கள் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்வுகள் நெருங்குவதால் ஆசிரியர்களுக்கு பாடம் நடத்துவதற்கு போதிய காலம் கிடைக்கவில்லை என்று ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் கற்றல் இழப்பை சரிசெய்யும் வகையில் தமிழக அரசு இல்லம் தேடி கல்வி திட்டத்தை செயல்படுத்தி தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. எனினும் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கு கற்றல் சரியான முறையில் இல்லை என்பதால் அரசு மாணவர்களின் நலன் கருதி சுழற்சி முறை இன்றி வகுப்புகள் நடத்த முடிவு செய்துள்ளது.
தற்போது வரும் ஜனவரி 3ம் தேதி முதல் 6 – 12ம் வகுப்பு வரை சுழற்சி முறை இன்றி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாக தீவிரமாக பரவி வரும் ஓமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை முறையே கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சானிடைசர், முகக்கவசம் பயன்படுத்துதல் உள்ளிட்டவைகளை கடைபிடிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை