பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு
பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அ.சண்முகசுந்தரம், மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மண்டல இணை பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
வரும் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில் 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை 2 கோடியே 15 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1,088 கோடி செலவில் (பயனாளி ஒருவருக்கு ரூ.505 செலவில்) வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை பழுப்புநிற காகித உறைகளில் பொட்டலமிட்டு வைத்திருக்க வேண்டும். பயனாளிகளுக்கு அனைத்து பொருட்களும் ஒரே தவணையில் வழங்கும் அளவில் தயார்நிலையில் இருக்க வேண்டும்.
திருப்பி அனுப்பக்கூடாது
எந்த காரணத்தை கொண்டும் பொருட்கள் இல்லை என்று ரேஷன் அட்டைதாரர்களை திருப்பி அனுப்பக்கூடாது.
பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பான தினசரி அறிக்கை பதிவாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும். இதற்காக கட்டுப்பாட்டு அறை அமைத்து, பிரத்தியேக தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டு, துணைப்பதிவாளர் நிலையில் தொடர்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டு, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத்தொகை ஆகியவை ரேஷன் கடைகளில் அரிசி ரேஷன் அட்டைதாரருக்கு வழங்குவதை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ரொக்கத்தொகை எவ்வளவு?
பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 3-ந் தேதியில் இருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் ரொக்கத்தொகை எவ்வளவு என்பது பற்றிய அறிவிப்பு இன்னும் வரவில்லை.
கருத்துகள் இல்லை