தமிழகத்தில் ஜன.3 முதல் பள்ளிகளில் தினசரி வகுப்புகள் நடைபெறுமா? அமைச்சர் விளக்கம்!
தமிழக அரசு கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விடுமுறை அறிவித்தது. அதனால் மாணவர்கள் கல்வியை தொடர ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டன. ஆனால் தற்போது கொரோனா நோய் தடுப்பூசி மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை பின்பற்றியதன் காரணமாக நோய் பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கியது.
அதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அனைத்து பள்ளிகளும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் ஓமைக்ரான் பரவல் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், மேற்கு வங்காளம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று 72 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழ்நாடு வந்த ஒருவருக்கு ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கு தொற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து ஜனவரி 3 முதல் தினசரி வகுப்புகள் நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியதால் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த அச்சம் நிலவுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியதாவது, “6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 3-ஆம் தேதி முதல் தினசரி வகுப்புகள் நடைபெறுவது குறித்து வருகிற டிசம்பர் 25-ஆம் தேதி முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்படும் அதன் பின் அறிவிப்புகள் வெளியாகும் என்றும் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் திருப்புதல் தேர்வு நடைபெறும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை