DigiLocker முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் DigiLocker முறையில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை – அரசாணை வெளியீடு!
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை காகிதமற்ற நிர்வாகத்தை அடைய முயற்சி செய்கிறது. இதனை தொடர்ந்து இனி மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம், குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களை பெறும் வசதியை செயல்படுத்தப்படுவதற்கான ஆணையை அரசு அறிவித்துள்ளது.
மின்னணு முறை:
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை இனி வரும் காலங்களில் காகிதமற்ற நிர்வாகத்தை அடைய முயற்சி செய்கிறது. இதனை தொடர்ந்து அனைத்து அரசுத் துறைகளிலும் டிஜிலாக்கர் அமைப்பை ஏற்றுக் கொள்ளும் வகையில் தற்போது மின்னணு ரீதியில் ஓட்டுநர் உரிமம் மற்றும் குடும்ப அட்டை உள்ளிட்டவற்றின் நகல்களை பெற முடியும். இதை செயல்படுத்தப்படுவதற்கான ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் “DigiLocker”அமைப்பு என்பது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை முயற்சியாகும்.
DigiLocker என்பது ஒரு அதிகாரியால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை அணுகுவதற்கான ஒரு தளமாகும். மேலும் ஆவணங்களை டிஜிட்டல் முறையில் சரிபார்க்கலாம். இதனால் காகித ஆவணங்களின் பயன்பாடும் குறைகிறது. இதன் மூலம் உண்மையான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை டிஜிட்டல் வடிவில் குடிமக்கள் அணுகலாம். இந்த DigiLocker முறை மூலமாக ஒவ்வொரு குடிமகனும் அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் மின்னணு முறையில் பெற முடியும். மேலும் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் அணுக முடியும்.
இதன் மூலம் பொதுமக்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது அதற்கு தேவையான ஆவணங்கள் அனைத்தையும் டிஜிட்டல் லாக்கர் வசதியில் இருந்தே எடுத்து இணைத்துக் கொள்ளலாம். மேலும் வாகன ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, மதிப்பெண் சான்றிதழ்கள் ஆகியவற்றின் மின்னணு நகல்களை இந்த டிஜிட்டல் லாக்கர் முறையின் மூலமாக பெறுவதற்கு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து மென்பொருட்களையும் டிஜிட்டல் லாக்கர் முறையுடன் இணைக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை