டிச.25ம் தேதி முதல் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்த முடிவு
தமிழகத்தில் கடந்த வாரம் ஒமிக்ரான் புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டதையடுத்து 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடர்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் வரும் டிச.25ம் தேதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பள்ளிகள் மூடலாம்
கொரோனா 2ம் அலைத்தொற்று பரவல்
ஓய்ந்ததற்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது இருந்த நோய்த்தொற்று சூழலில் பள்ளி மாணவர்கள் பலர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வர முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து கடந்த நவ.1ம் தேதி முதல் 1 லிருந்து 8 வரையுள்ள வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்தது.
அந்த வகையில் கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜன.3ம் தேதி முதல் மேல்நிலை மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையிலான வகுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு வழக்கமான முறையில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் அதன் தாக்கத்தை பதிவு செய்திருக்கிறது.
அதனால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்தும் சூழல் மாணவர்களின் பெற்றோரிடையே அச்சத்தை உருவாக்கி இருக்கிறது. இப்போது தமிழகத்தில் 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நிறுத்துவது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் முதல்வர் முக ஸ்டாலினுடன் வரும் டிச.25ம் தேதி முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இக்கூட்டத்திற்கு பின்பாக 1 முதல் 8 வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் தொடர்ந்து நடைபெறுமா என்பது குறித்து அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை