தமிழகத்தில் நுழைந்த ஓமைக்ரான் வைரஸ் – முதல் நபருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!
தமிழகத்தில் உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் தொற்று தற்போது சென்னையை சேர்ந்த ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய தொற்று எவ்வாறு பரவியது என்பது குறித்து தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஓமைக்ரான்:
நாடு முழுவதும் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று கடந்த சில மாதங்களாக குறையத் தொடங்கியது. ஆனாலும் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் பல அவதாரங்கள் எடுக்க தொடங்கிய கொரோனா தொற்று ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஓமைக்ரான் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இதுவரை இந்தியாவில் கர்நாடகா, இராஜஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் பரவிய நிலையில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் தொற்று தற்போது தமிழகத்தில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நைஜீரியா நாட்டில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்துள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவரோடு விமானத்தில் பயணம் மேற்கொண்ட அனைவரும் கண்டறியப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து வந்த 41 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு சாதாரண கொரோனா அறிகுறி தானா என்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ள நபர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதுவரை 10 மாநிலங்களில் 69 பேருக்கு ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் மக்கள் அச்சம் கொள்ளாமல் தடுப்பூசி செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை