ஒமிக்ரான் எதிரொலி இந்தியாவில் மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை!
இந்தியாவில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் ஒமிக்ரான் வைரஸ் வழக்குகளை அடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி நாளை (டிச.23) முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மோடி ஆலோசனை
கடந்த மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு 100க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை விட, அதிகளவு வீரியம் மிக்கதாக கருதப்படும் இவ்வகை ஒமிக்ரான் வைரஸ் தொற்று பல்வேறு நாடுகளில் பெரிதளவு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றானது தற்போது இந்தியாவிலும் கூட பரவ துவங்கி இருக்கிறது.
அந்த வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த இருவருக்கு இந்த ஒமிக்ரான் தொற்று முதன் முதலாக பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குஜராத், டெல்லி, மஹாராஷ்ரா, உத்தரகண்ட், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த நபர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் இதுவரை சுமார் 213 பேர் இந்த ஒமிக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் மாறுபாடு இந்தியாவில் 3வது அலையாக உருவாக்கூடும் என்றும் சுகாதார வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் மூலம் முழு இந்தியாவும் கொரோனா தொற்று பாதிப்பின் பழைய நிலையை அடையலாம் என்று மக்கள் மத்தியில் அச்சம் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் புதிய கொரோனா வைரஸ் மாறுபாட்டான ஒமிக்ரானால் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஒரு முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் நாளை (டிச.23) நடைபெற இருக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கை, நாடு தழுவிய முழு முடக்கம் உள்ளிட்ட சில தீர்மானங்களை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 6,317 புதிய கொரோனா வழக்குகள் மற்றும் 318 இறப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை