10, 12ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்த உத்தரவு!
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுத உள்ள 10, 12-ம் வகுப்புமாணவர்கள் இந்த விடுமுறை காலத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல்பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவு பிறப்பிப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு அதிக அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொற்று பரவல் காரணமாக இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் அடிப்படையில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காரணமாக மாணவர்களின் நேரடி கற்றல் திறன் பாதித்து உள்ளதாக பெற்றோர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதுவோர்களான 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு அவ்வாறு வகுப்புகள் நடத்தப்படவில்லை. இந்த அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பயில்பவர்களுக்கும் கல்வித் தொலைக்காட்சி, செல்போன் செயலிகள் மூலமாக கற்றல் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார்.
இதனை தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக கவனம் செலுத்தி பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும். அதன் பின்பு வாட்ஸ்அப் வழியாக வாரம்தோறும் பாட வாரியாக குறுந்தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். இந்த குறுந்தேர்வில் மாணவர்கள் குறைவாக மதிப்பெண் எடுத்திருந்தால், குறைவான மதிப்பெண் எடுத்த பாடங்களை கண்டறிந்து ஆசிரியர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை