ஜனவரி 17ம் தேதி திங்கட்கிழமை பொது விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் ஜனவரி 17ம் தேதி திங்கட்கிழமை அன்று அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விடுமுறை:
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதல் நாள் போகியில் ஆரம்பித்து காணும் பொங்கல் என மொத்தம் 4 நாட்கள் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும். இப்பண்டிகையை கொண்டாட்ட ஒரு வாரத்திற்கு முன்பாகவே மக்கள் தயாராகி விடுவர். அந்த வகையில் தற்போது மக்கள் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கி விட்டனர். கடை வீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்த பண்டிகை ஒரு பாரம்பரிய விழா என்பதால் வெளியூர்களில் பணி செய்பவர்களும் பண்டிகை நாட்களை குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்று சொந்த ஊர்களுக்கு வருவர். அந்த வகையில் நடப்பாண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜன.14 பொங்கல், ஜன.15 மாட்டுப்பொங்கல், ஜன.16 உழவர் திருநாள் ஆகிய 3 நாட்கள் தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் அன்று முழு ஊரடங்கு என்பதால் போக்குவரத்து கிடையாது.
எனவே அதற்கு மறுநாள் ஜன.17 திங்கட்கிழமை அன்றும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 18ம் தேதி தைப்பூச திருவிழா அன்று ஏற்கனவே அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாளான ஜன.17 வேலை நாளாக இருந்த நிலையில் தற்போது அன்றும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை தினம் என்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 29.01.2022 அன்று பணி நாளாக அறிவித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை