அரசு ஊழியர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை – வெளியாகுமா அறிவிப்பு?
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய சலுகையை தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
கொரோனா பரவல்
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அத்துடன் தென்னாப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் நலன் கருதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி, மத்திய அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டும் அலுவலகத்திற்கு வர வேண்டும் மீதமுள்ள ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி புரிய வேண்டும். அத்துடன் கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளி போன்ற ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற அறிவிப்புகளை டெல்லி, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு வழங்கிய எந்தவொரு சலுகையும் தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். மேலும் ஊழியர்கள் கொரோனா பயத்துடன் அலுவலகத்திற்கு வருகை புரிகின்றனர். அதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கிய சலுகையை தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது. அத்துடன் இதனை உடனடியாக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள் இல்லை