சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா!!
சென்னையைச் சேர்ந்தவர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை, பரபரப்பாக இயங்கி வரும் ஓஎம்ஆர் பகுதியில் இவரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒருமுறை அண்ணாதுரை ஆட்டோவில் பயணம் செய்தவர்கள், நிச்சயம் அடுத்த முறை அவரது ஆட்டோவுக்காக காத்திருந்து பயணம் செய்ய வேண்டும் என நினைக்கும் அளவுக்கு, ஒரே சவாரியில் வாடிக்கையாளர்களின் மனங்களை கவர்ந்துவிடுவதே அண்ணாதுரையின் சிறப்பு.
ஆட்டோ ஓட்டும் பணிக்கு விரும்பி வரவில்லை எனினும், கிடைத்த வேலையை பிடித்த மாதிரி விரும்பி செய்ய வேண்டும் என்ற நோக்கில் இயங்கி வரும் அண்ணாதுரை, தன்னுடைய ஆட்டோவில் மடிக்கணினி, ஐ-பேட், டேப், குளிர்சாதனப் பெட்டி, இலவச வை-பை, இலவச ஸ்நேக்ஸ், இலவச சாக்லேட், நாளிதழ்கள், வார இதழ்கள், டிவி, என பயணிகளைக் கவர பல வசதிகளை வைத்திருக்கிறார். இத்தனை வசதிகளை வழங்கும் அண்ணாதுரையின் ஆட்டோவிற்கான கட்டணமும், மற்ற ஆட்டோவில் வசூலிக்கப்படும் அதே அளவிலான கட்டணமே.
இந்த சேவைகளை வழங்குவதற்கு முன்பு, வாடிக்கையாளர்களுக்காக தான் காத்திருக்க வேண்டிய நிலை இருந்ததாகவும், தற்போது வாடிக்கையாளர்கள் தனக்காக காத்திருக்கும் நிலை உள்ளதாகவும் பெருமிதத்துடன் கூறுகிறார் அண்ணாதுரை.
இவை அனைத்திற்கும் மேலாக, இவரது ஆட்டோவில் எப்போதும் ஆசிரியர்களுக்கு இலவசம், ஆசிரியர் பணி என்பது உலகில் உன்னதமான பணி அதனால், ஆசிரியர்களுக்கு எனது ஆட்டோவில் எப்போதும் கட்டணம் கிடையாது என்கிறார் அண்ணாதுரை. மேலும், தற்போது கொரோனா பரவலுக்கு பின்னர் துப்புரவு தொழிலாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட மேலும் மூன்று துறையை சேர்ந்தவர்களுக்கும் தனது ஆட்டோவில் எப்போதும் கட்டணம் கிடையது என்று கூறி வியப்பை ஏற்படுத்துகிறார் அண்ணாதுரை.
இத்தோடு இந்த பட்டியல் முடிந்துவிடவில்லை, அன்னையர் தினம், குழந்தைகள் தினம், பெண்கள் தினம் ஆகிய தினங்களின்போது தள்ளுபடி விலையில் சவாரி என்று இன்னும் பல ஆச்சர்யங்களை சுமந்து பயணிக்கிறது அண்ணாதுரையின் ஆட்டோ.
ஆட்டோ ஓட்டுநர் அண்ணாதுரை குறித்து நியூஸ்18 தமிழ்நாடு 2018ம் ஆண்டிலே செய்தி வெளியிட்டிருந்தது.
பன்னிரண்டாம் வகுப்புப் படிப்பை பாதியில் நிறுத்திய அண்ணாதுரை, செய்யும் தொழிலில் வாடிக்கையாளர்களை எப்படித் தன்வயப்படுத்துவது அவர்களுக்கு எப்படி நம்பகத்தன்மை ஏற்படுத்துவது, தன்னிடம் மீண்டும் வாடிக்கையளர்களை எப்படித் தேடிவரவைக்க முடியும் என்பதை நிகழ்த்தி காட்டியுள்ளார்.
இதனால், வாடிக்கையாளரைக் கவர்வது எப்படியென இந்திய அளவில் பல மேடைகளில் பேச அண்ணாதுரைக்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, அண்ணாதுரை உலகின் முன்னணி நிறுவனங்களான, மைக்ரோசாப்ட், கூகுள், எச்.பி என 300க்கும் மேற்பட்ட நிறுவங்களின் கருத்தரங்கில் பங்கேற்று தனது யோசனைகளை முன்வைத்துள்ளார்.
377
அந்த வரிசையில், அண்ணாதுரை குறித்து தனியார் ஊடகம் வெளியிட்ட வீடியோவை பார்த்த மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அண்ணாதுரை குறித்து வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அண்ணாதுரையிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எம்.பி.ஏ மாணவர்கள் இவருடன் ஒரு நாள் செலவிட்டால் போதும், வாடிக்கையாளர்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல, பேராசிரியர் என்று புகழாரம் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆட்டோ ஓட்டுநரை புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா!!
Reviewed by Rajarajan
on
24.1.22
Rating:
கருத்துகள் இல்லை