கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து அமைச்சர் விளக்கம்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. . அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 6ம் தேதி முதல் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருக்கும். அத்துடன் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட நாட்களில் வழிபாட்டு தலங்கள் திறக்க தடை விதித்துள்ளது.
மேலும் உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், கடைகள் உள்ளிட்ட இடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இதையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுகிறது. இது குறித்து பன்னீர் செல்வம் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அரசு அறிவிக்கும் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பொதுமக்கள் அனைவரும் பின்பற்றி கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றினால் தான் தமிழகத்தில் முழு ஊரடங்கை தவிர்க்க முடியும் என்று கூறியுள்ளார். அத்துடன் வள்ளலாரின் கூற்றுப்படி ‘தனித்திரு, விழித்திரு’ என்ற வாசகத்தையும் மேற்கோள்காட்டி அதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அமைச்சர் பன்னீர் செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை