10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 21 முதல் தேர்வுகள்
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ள நிலையில், வரும் ஏப்ரல் 21ம் தேதி முதல் மதிப்பீடு தேர்வுகளை நடத்த தனியார் பள்ளிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் கடந்த ஜனவரி 19ம் தேதி முதல் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திறக்கப்பட்டன. பின்னர் பிப்ரவரி 8 முதல் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கின. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணையையும் அரசு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது. மேலும் 9 முதல் 11ம் வகுப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 110வது விதியின் கீழ் அறிவித்துள்ளார்.
இருப்பினும் நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து செய்யப்பட்ட பொழுது அவர்களின் காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை அதற்கான வாய்ப்புகள் இல்லை. தமிழக அரசும் இதுவரை மதிப்பெண்கள் மதிப்பீடு செய்யும் முறையை வெளியிடவில்லை. இந்நிலையில் தனியார் பள்ளிகள் புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் வரும் ஏப்ரல் 21ம் தேதி முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீடு தேர்வுகளை நடத்த முடிவு செய்துள்ளன. குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கேள்விகளை வைத்து ஏப்ரல் 24 வரை தேர்வுகள் நடைபெற உள்ளது. ஆங்கிலம், கணிதம், தமிழ் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை