Join our Telegram

What's%20App
Subscribe to my YouTube channel

எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல்

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் நிகழாண்டில் 100 எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தற்போது அக்கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் 250-ஆக அதிகரித்துள்ளது.

அடுத்த சில நாள்களில் மதுரை, கரூர் மருத்துவக் கல்லூரிகள் மூலமாக மேலும் 245 இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என மருத்துவக் கல்வி இயக்குநரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல், அரசின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.



இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு நிலவரப்படி பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன. அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. மீதமுள்ளவை தமிழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 95 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது. அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். அதில் முதல்கட்டமாக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
அதுமட்டுமன்றி, கரூர் மருத்துவக் கல்லுரிக்கு 55 மருத்துவ அலுவலர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.




எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்க இந்திய மருத்துவக் கவுன்சில் ஒப்புதல் Reviewed by Rajarajan on 5.5.19 Rating: 5

கருத்துகள் இல்லை